கொட்டும் மழையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுத்திகரிப்பு ஆலையின் திறன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், கட்டமைப்பு, செயல்திறன், நீரின் பயன்பாடு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.
கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் செயல்படும் TTRO நிலையங்களின் மூலம் கழிவுநீர் மறு சுழற்சி செய்யப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளுக்கு நிலையான மாற்றுநீர் ஆதாரம் உருவாக்கப்படுகிறது.