×

கூட்டணிக்காக தமிழக மக்கள் நலனை விட்டுக்கொடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாகக் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியான பா.ஜ.க வற்புறுத்தினாலும் மக்கள் நலனுக்காக அனுமதிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வருகிற சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்த ஒரு மத விழாவும் பொது வெளிகளில் கொண்டாடப்படுவது இல்லை. உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக் கல்யாண
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாகக் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியான பா.ஜ.க வற்புறுத்தினாலும் மக்கள் நலனுக்காக அனுமதிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


தமிழகத்தில் வருகிற சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்த ஒரு மத விழாவும் பொது வெளிகளில் கொண்டாடப்படுவது இல்லை. உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக் கல்யாண திருவிழா கூட பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது. தமிழக மக்களின் முக்கிய திருவிழாக்களான சித்திரை தமிழ் புத்தாண்டு, ஆடி 18, ஆடி மாத அம்மன் வழிபாடு, கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடினார்கள். இஸ்லாமியர்கள் ரம்ஜான், பக்ரீத் சிறப்புத் தொழுகையை வீடுகளிலேயே செய்தனர்.


தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவை மட்டும் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்திக் கொண்டாடுவோம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சி என்பதால் அனுமதித்து விடாமல், கூட்டணிக் கட்சி மனம் நோகாமல் இருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் நடவடிக்கைகள் பலரது கவனத்தைப் பெற்றுள்ளன. மக்கள் நலனில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவது அவர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது என்று கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தியே தீருவது என்று வந்த பா.ஜ.க நிர்வாகிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களைக் காட்டி அதை மீற வேண்டுமோ என்று கேட்டு அவர்களே உண்மையைப் புரிந்துகொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளார். வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடையில்லாத போது எதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலை மீற வேண்டும் என்ற கேள்விக்கு பா.ஜ.க-வால் பதில் கூற முடியவில்லை. ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக்கொடுப்பது என்று இல்லாமல், அனைவரின் மனம் கோணாத வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரணைத்து சென்றிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.