அரசு ஊழியர்களுக்கு செக்..! இதை செய்யாதவங்களுக்கு இனி ப்ரொமோஷனே கிடையாது!
தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் கடந்த, 5ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையாக சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விபரங்களையும், வரும், அக்., 31ம் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேறு யார் பெயரிலும், அரசு ஊழியர்கள் சொத்துக்கள் வாங்கியிருந்தாலும், அவற்றையும் குறிப்பிட்டு, அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான், அவர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் பெறும். சொத்து விபரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாகவும் கருதப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில், 'அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள் தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். 'பின், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தான், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை, வீடுகள், நிலங்கள், நகைகள், கார், இருசக்கர வாகனங்கள், ரொக்கம், கடன் என, அனைத்து விபரங்களையும் அக்., 31க்குள், அரசு இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள், பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் உட்பட, அனைத்து சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.