நடுரோட்டில் தீ பிடித்த சென்னை - மதுரை ஆம்னி பேருந்து.. பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..!!
சென்னையிலிருந்து பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி வழியாக மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இப்ராஹிம் (63) ஓட்டியுள்ளார். படுக்கை வசதி கொண்ட இந்த ஆம்னி பேருந்தில் 23 பயணிகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வி.களத்தூர் பிரிவு பாதை பகுதியில் இந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது.
அதிகாலை சுமார் 5:30 மணியளவில், பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் இப்ராஹிம், பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேறுபடி கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக தங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு பேருந்தை விட்டு பயணிகள் வெளியேறி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு மங்களமேடு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து எலும்பு கூடாக மாறியுள்ளது.