×

`தங்கை திடீர் மரணம்; பிளாட்பாரத்தில் சடலத்துடன் தவித்த சகோதரிகள்!’- உதவிகரம் நீட்டி நெகிழ வைத்த சென்னை போலீஸ்

உயிரிழந்த சகோதரியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த சகோதரிகளுக்கு சென்னை காவல்துறையினர் உதவி செய்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஓட்டேரியில் நடந்துள்ளது. சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம் நகரில் உள்ள பிளாட்பாரத்தில் துணியால் டென்ட் அமைத்து பிரபாவதி (57), ராஜேஸ்வரி (59), விஜயலட்சுமி (58) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சகோதரிகள். இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதி நேற்று திடீரென உயிரிழந்தார். சகோதரியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் விஜயலட்சுமியும் ராஜேஸ்வரியும்
 

உயிரிழந்த சகோதரியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த சகோதரிகளுக்கு சென்னை காவல்துறையினர் உதவி செய்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஓட்டேரியில் நடந்துள்ளது.

சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம் நகரில் உள்ள பிளாட்பாரத்தில் துணியால் டென்ட் அமைத்து பிரபாவதி (57), ராஜேஸ்வரி (59), விஜயலட்சுமி (58) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சகோதரிகள். இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதி நேற்று திடீரென உயிரிழந்தார். சகோதரியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் விஜயலட்சுமியும் ராஜேஸ்வரியும் தவித்துக் கொண்டிருந்தனர். பலரிடம் உதவிக் கேட்டும் யாரும் முன்வரவில்லை. சகோதரியின் உடலை பிளாட்பாரத்தில் வைத்தப்படி 2 பேரும், யாராவது உதவி செய்வார்களா என்ற ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

இந்தத் தகவல் தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு சென்றது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா, ஏட்டு பழனி, ஜான் மேனகா குமரன் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பிரபாவதியின் உடலை குளிப்பாட்டினர். பின்னர் சேலை அணிவித்த காவல்துறையினர், பூ, மாலை போட்டு பிரபாவதிக்கு இறுதிச் சடங்கு செய்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டேரி மயானத்துக்கு பிரபாவதியின் சடலம் கொண்டுசெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் சகோதரியை இழந்த ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு இன்ஸ்பெக்டர் ஆறுதல் கூறினார். அப்போது, இவரும் கையெடுத்து கும்பிட்டு `நீங்க நல்லா இருக்கணும் அம்மா’ என கண்ணீர்மல்க கூறினர். பின்னர் ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு உணவு உள்ளிட்ட தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொடுத்து விட்டு காவல்துறையினர் அங்கிருந்த சென்றனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, பிரபாவதி மற்றும் அவரின் சகோதரிகள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள். குப்பைகளை பொறுக்கி சென்னை ஓட்டேரியில் வாழ்ந்துவந்தனர். ஊரடங்கால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, பசியால் இவர்கள் தவித்துள்ளனர். இந்த நிலையில், பிரபாவதி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று, பிரபாவதிக்கு இறுதிச்சடங்கை செய்தோம். இவர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தில் வீடு உள்ளது. அந்த வீட்டில் குப்பைகளைச் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீட்டைச் சுத்தம் செய்து விஜயலட்சுமி, ராஜேஸ்வரியை தங்க வைத்துள்ளோம்” என்றனர்.