பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் சென்னை கிராமத் திருவிழா... என்னென்ன இருக்கு? நுழைவு கட்டணம் எவ்வளவு?
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் சென்னையில் ஒரு கிராமத் திருவிழா நடைபெறுகிறது.இந்த கிராமத்து திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உள்ளே இடம்பெற்றுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார். இந்த கிராமத்து திருவிழா வரும் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண்முன் காட்சிப்படுத்தும் விதமாக 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு இன்று நுழைவுக் கட்டணமாக ரூ.50, 23 மற்றும் 24-ந்தேதிகளில் ரூ. 150 வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திருவிழா நடைபெறுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''நகரத்தில் இருக்கும் நாம், விடுமுறை நாட்களில் கிராமத்தில் இளைப்பாறுவோம். இயந்திரத்தனமான வாழ்க்கையில் பழைய பாரம்பரிய விஷயங்களை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். சிக்னலில் கூட நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். எனவே இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது'' என்றார்.