சென்னையில் பரபரப்பு : தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் கைது..!
300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர், நடிகைகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே, அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து, தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள், “இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் 13-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டு உத்தரவை மீறி மாநகராட்சி அலுவலகம் அருகே போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனால், காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தூய்மை பணியாளர்களில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் அந்த பகுதியில் குவிந்தனர்.
இந்த நிலையில், தேசிய கொடி, கம்யூனிஸ்டு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் தொடரலாம் என கோர்ட்டு கூறியிருந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு எதிராக, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.