"உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?"- ஐபிஎஸ் அருணிடம் ஐகோர்ட் கேள்வி
தன்னுடைய 28 ஆண்டு கால அனுபவத்தில் தவறு செய்ததாக தன் மீது ஒரு புகார் கூட பதிவானதில்லை என லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
சென்னை கொளத்தூரில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில், 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி , அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக, கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சந்தோஷ் சர்மாவை சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து அதிர்ச்சி தெரிவித்ததுடன், அந்த உத்தரவை பிறப்பித்த சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.அருணை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆணையர் அருண், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் முன் காலையில் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், நீதிமன்றத்தின் சம்மனை வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரியை இரண்டு மணி நேரம் காக்க வைத்த ஊழியரை ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை மாலைக்கு தள்ளி வைத்திருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற பணியாளரை காக்க வைத்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் ஆஜராக்கியிருந்தார். அருணிடம், நீதிமன்ற பணியாளரை காக்க வைத்தது ஏன்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என சரமாரி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், நீதிமன்ற ஊழியரை காக்க வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை, அருண் ஒரு கூட்டத்தில் பங்கேற்று இருந்ததால், அவர் வருவதற்காக காத்திருக்க வேண்டியது வந்தது என தெரிவித்தார். அப்போது, கடந்த 28 ஆண்டு கால அனுபவத்தில் என் மீது ஒரு புகார் கூட இல்லை என்றும் ஒரு சில சமூக ஊடகங்கள் தான் தன் மீது பொய்யான ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக அருண் தெரிவித்தார். மேலும், சந்தோஷ் சர்மா போலி கையெழுத்து மூலமாக் தொடர் மோசடிகளில் ஈடுபட்டதாலேயே அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாகவும் விளக்கமளித்தார். இதையடுத்து சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெரிவிப்பதற்காகவே அருணை ஆஜராக உத்தரவிட்டதாக குறிப்பட்ட நீதிபதிகள், சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, வரும் வெள்ளி கிழமைக்கு தள்ளி வைத்தனர்.