×

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி  

 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 


 
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.  மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து விளக்கம் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.