சென்னை: சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பி.. துடிதுடித்து பலியான நபர்..
ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல்(57). பழக்கடை ஒன்றில் பணியாற்றி வரும் இவர் வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக சாலையில் நடந்து சென்றதாக தெரிகிறது. இதனிடையே நேற்று இரவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்துள்ளது. அத்துடன் அதில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. பழவியாபாரியின் வீட்டிற்கு சென்று பழங்களை எடுத்து வருவதற்காகச் சென்ற சாமுவேல், தேங்கியிருந்த மழைநீரில் கால் வைக்கவே மின்சாரம் தாக்கி அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் சிறிது நேரத்தில் சாமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற நீலாங்கரை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.