×

#CHENNAI DAY: சென்னைவாசிகளுக்குக்கூடத் தெரியாத வரலாற்றை சொல்லும் ஓர் இடம் "சேப்பாக்கம் மாளிகை"..!

 
இன்றைய சென்னைவாசிகளுக்குக்கூடத் தெரியாத வரலாற்றைச் சொல்லும் ஓர் இடமும் அங்கே இருக்கிறது.சேப்பாக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கிரிக்கெட் ஸ்டேடியமும், சென்னைப் பல்கலைக்கழகமும் தான்.

சென்னையில் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான கட்டிடங்களில் நம்மில் பலருக்கு தெரியாமல் போன ஓர் இடம் தான் "சேப்பாக்கம் மாளிகை". 

வெள்ளையர்களுக்கு மிகவும் நெருக்கமான ஆற்காடு நவாபாக விளங்கியவர் முஹம்மது அலி கான் வாலாஜா. கர்நாடக போர்களின் முடிவில், வெள்ளையர் பாதுகாப்பில் இருக்க வேண்டிய நிலை. வெள்ளையர்களின் தலைமையகமான ஜார்ஜ் கோட்டையில் தனக்கு ஒரு இடம் அமைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு பதிலாக, அதன் அருகேயே ஒரு பெரிய மாளிகையை அவருக்கு கட்டித் தர திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பொறியாளரான பால் பென்ஃபீல்டு, சேப்பாக்கம் மாளிகையை உருவாக்கினார். 

1768ம் ஆண்டு இந்த மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. ஹுமாயூன் மஹால், கல்சா மஹால் என்ற இரண்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. நவாப் மற்றும் குடும்பத்தினர் வசிப்பதற்காக கல்சா மஹாலும், தர்பார் நடத்துவதற்காக ஹுமாயுன் மஹாலும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட காலத்திற்கு நிலைக்கும் கட்டிடங்களை உருவாக்குவதில் பால் பென்பீல்டு வல்லவராம். இந்தோ-சராசெனிக் கலாச்சார கட்டிட முறை முதன்முறையாக புகுத்தப்பட்ட கட்டிடங்களில் ஒன்று சேப்பாக்கம் மாளிகை. இதில் இருந்து பிரபலமான கட்டிட முறை தான் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி அமைச்சரவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு வழி வகுத்தது. 

1855ம் ஆண்டு சேப்பாக்கம் மாளிகை ஏலத்திற்கு விடப்பட்டது. அதை அரசே எடுத்துக் கொண்டது. பிற்காலத்தில் இந்த கட்டிடங்கள் பல மாற்றங்களை சந்தித்தன. முக்கியமாக வடக்கு பகுதியான ஹுமாயூன் மஹாலை வருவாய்த் துறை கட்டிடமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது. ராபர்ட் சிஸ்ஹோம் என்ற பொறியாளரால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

1860களில் இந்த கட்டிடத்தில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் எனப்படும் 'பொறியியல் கல்லூரி' (College of Engineering) செயல்பட்டு வந்தது. 1923ம் ஆண்டில், பொறியியல் கல்லூரி கிண்டிக்கு மாற்றப்பட்டு, பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் ஆனது. அந்த இடத்தில் தான் அரசு அலுவலகளுக்காக எழிலகம் கட்டப்பட்டது. தற்போது எழிலக வளாகத்தில் உள்ள கல்சா மஹாலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இயங்கி வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த ஹுமாயூன் மஹாலின் கூரை, 2012ம் ஆண்டு இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.