×

கொடுங்கையூரில் வேஸ்ட் எனர்ஜி பிளாண்ட் உருவாக்கப்படும்- பிரியா

 

ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மையின் புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்துள்ளோம், அத்திட்டங்களை சென்னையில் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்  என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

திடக்கழிவு மேலாண்மையின் புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ், சென்னை மாநகராட்சியின் துணை  ஆணையர் சுகாதாரம் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் குழுவாக  ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று  ஆய்வுகளை மேற்கொண்டு 7 நாட்களுக்கு பின் சென்னை வந்தடைந்தனர். 

சென்னை விமான நிலையம் வந்தடைந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மாநகராட்சி பொருத்தவரையில் திடக்கழிவு மேலாண்மை என்பது சவாலான விஷயமாக உள்ளது. முதலமைச்சரின் கனவு திட்டமான சிங்கார சென்னை உருவாக்குவதற்கு திடக்கழிவு மேலாண்மையின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை கையாளும்  முறையை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்தோம். 

ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு முறையை கையாளுகின்றனர். குறிப்பாக இத்தாலியில் நாம் பின்பற்றும் முறையையே செய்கின்றனர். நாம் திடக்கழிவுகளை பிரிப்பது போலவே திடக்கழிவுகளை பிரிக்கின்றனர். ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக ஒரு பிளான்ட் அமைத்து புதிய யுத்தியை கையாளுகின்றனர். சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் பிளாஸ்டிக் ஒரு சவாலான விஷயமாக உள்ளது. இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து இந்த முறையை செயல்படுத்தலாமா? என்பதை கேட்டு நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல் பிரான்சில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர். சென்னையிலும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதற்கு தேவையான ஆய்வுகளை மேற்கொண்டோம். அனேக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் அவர்களின் யுக்தியை குறிப்பு எடுத்துள்ளோம். அதனை சென்னை மாநகராட்சியில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் துறையின் அமைச்சரோடு கலந்து ஆலோசித்து இந்த புதிய திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவரின் ஒப்புதலுக்கு பிறகு திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

ஸ்பெயின் நாட்டில் குப்பைகளை எடுக்கும் பொழுதே அந்த லாரிகளில்  பிளாஸ்டிக் ஆர்கானிக் என பல வித குப்பைகள் பிரிக்கப்படுகிறது. அதுபோல சென்னை மாநகராட்சியிலும் செயல்படுத்த முடியுமா என ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். சென்னை கொடுங்கையூரில் புதிதாக வேஸ்ட் எனர்ஜி பிளாண்ட் உருவாக்கப்படும்.” என தெரிவித்தார்.