×

அறநிலைத்துறை அதிரடியால் ரூ.9 கோடி பாக்கி வசூல்

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள 14 கிரவுண்டு 910 சதுர அடி நிலமானது கடந்த 1901ம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அந்நிறுவனம் நீண்டகாலமாக வாடகைத் தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது. இச்சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  அறிவுறுத்தலின் பேரில், கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் இணைந்து நிலுவைத் தொகையை மீட்பதற்கான அதிரடி ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 18-ஆம் தேதி 15 நாட்கள் அவகாசம் வழங்கி இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகாரிகளின் இந்த கெடுபிடியான நடவடிக்கையைத் தொடர்ந்து, அத்தனியார் நிறுவனம் 10 சதவீத டி.டி.எஸ் தொகையைக் கழித்துக் கொண்டு எஞ்சிய ரூ.8 கோடியே 77 லட்சத்து 20 ஆயிரத்து 436 ரூபாயைக் கோயில் வங்கிக் கணக்கில் உடனடியாகச் செலுத்தியுள்ளது. வரவு வைக்கப்பட்ட இத்தொகையைத் தவிர்த்து, வருமான வரித்துறையிடமிருந்து எஞ்சிய டி.டி.எஸ் தொகையையும் மீட்பதற்கான சட்டப்பூர்வ முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆன்மீக அன்பர்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையிலும், கோவில் சொத்துகள் மற்றும் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் திறம்படச் செயல்படுத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டைப் பெற்றுள்ளது.