15 நாட்களில் குற்றப்பத்திரிகை, 55 நாட்களில் தூக்குத் தண்டனை: புனே வழக்கில் வென்ற நீதி!
கடந்த மே 1ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீம்ராவ் காம்ப்ளே, 65, என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மே 1ம் தேதி அன்றே போராட்டங்கள் வெடித்தன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜய் மிசாரை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்து, விரைவு விசாரணைக்கு உத்தரவிட்டார். போலீசார் 15 நாட்களுக்குள் 82 சாட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். குற்றம் நடந்து 55 நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது.3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை, 'அரிதானவற்றில் அரிதானது' என்று வகைப்படுத்தி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.பாதிக்கப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விபுல் துஷிங் கூறுகையில், 'இந்தக் குற்றத்தின் தன்மை மிகவும் கொடூரமானது. குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இதனை 'அரிதிலும் அரிதான' வழக்கு என வகைப்படுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளது,' என்றார் .