×

அடுத்த 2 மணிநேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
 

 

வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பரவலாக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று அதிகாலை சென்னைக்கும் - புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்த நிலையில்,  கிருஷ்ணகிரி,  திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்தது.

இந்நிலையில் சென்னைக்கு அருகே வட தமிழகத்தில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுக் குறைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தெற்கு கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பரவலாக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர்,  திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல்,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.