×

தென்தமிழக மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நாளை மறுதினம் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் 06 மற்றும் 07ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. இதேபோல் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.