×

அடுத்த 2 வாரத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு!

 

தென் தமிழகத்தில்  இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று டெல்டா மாவட்டங்கள் ,கடலூர், சேலம் ,ஈரோடு, நீலகிரி ,அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும்  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 8ம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்  வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து   அடுத்த 2 வாரத்தில் உள்தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம்   கூறியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.