×

"வேகமெடுக்கும் கொரோனா... டேஞ்சரில் தமிழ்நாடு" - மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்!

 

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஒமைக்ரான் பாதிப்பும் 5 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தான் மளமளவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எகிறி வருகிறது. தமிழ்நாட்டில் கண்டறியப்படும் கொரோனா தொற்றுகளில் 85% ஒமைக்ரான் தொற்று தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதன் முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துவிடுவதால், ஒமைக்ரான் சோதனையை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

இச்சூழலில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார துறை இணை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது பேசிய அவர், "உலகளவில் 159 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் உச்சமடைந்துள்ளது. 8 ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் உயர்ந்துள்ளது. ஜனவரி 12 நிலவரப்படி 9.55 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் விகிதம் 11.05% ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 300 மாவட்டங்களில் இந்த விகிதம் 5% அதிகமாக இருக்கிறது.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உபி,கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இப்போது கவலைக்குரிய மாநிலங்களாக மாறிவிட்டன. அங்கு தினமும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளதே அதற்கு காரணம். பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93% ஆக்சிஜனை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம். லேசான அறிகுறிகளுடன் சிசிச்சை பெறுவோர் தொற்று உறுதி செய்யப்பட்டு 7ஆவது நாள் வீடு திரும்பலாம்” என்றார்.