×

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன புதிய கட்டடம் :  ஜன.12-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் ...

 

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பிரதமர் மோடி ஜன.12-ல் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்  (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட  ஆய்வு நிறுவனம். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு,  2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிறுவனம் சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் தான் இயங்கி வருகிறது.
 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கென  தனியே கட்டடம் அமைக்க சென்னை பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு  ரூ.24.65 கோடி  நிதியும் ஒதுக்கப்பட்டது.  பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்தக் கட்டடத்தில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், நிர்வாகப் பிரிவு அறைகள், பன்னோக்கு ஒலி-ஒளி காட்சி கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சுமார் 70,000 சதுர அடி பரப்பில் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள,  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பிரதமர் மோடி ஜன 12 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக  திறந்து வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க இருக்கிறார்.