திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர். தொடர் விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் அண்ணாமலையார் திருக்கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 1, 2026 முதல் அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களை ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்ததும் டோக்கனை காண்பித்து செல்போனை திரும்பப் பெறலாம். இதற்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி செல்போனை கோயிலுக்குள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.