×

செல்போன் டவரை காணவில்லை...வடிவேல் காமெடியை மிஞ்சிய சம்பவம் - சேலத்தில் பரபரப்பு

 

கிணத்தை காணவில்லை என்ற வடிவேலு பாணியை போல செல்போன் டவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காமெடி நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் தனது விவசாய கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த காவல் அதிகாரி ஒருவர் தனக்கு வேலையே வேண்டாம் என அங்கிருந்து சென்றுவிடுவார். இந்த காமெடி வெளிவந்த சமயத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதே போன்ற சம்பவம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நிகழ்ந்துள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில் அங்கு சென்ற ஒரு கும்பல் காவலாளியிடம் சில ஆவணங்களை காட்டி  இந்த செல்போன் டவர் செயல்பாடற்று உள்ளது, இதனை கழற்றி வேறு இடத்தில் நட உள்ளோம் என்று கூறிவிட்டு கிரேன் எந்திரங்களைக் கொண்டு டவரை கழற்றிச் சென்றுள்ளது. இதனிடையே  சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அங்கு வந்து பார்த்த போது டவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி நிறுவனத்தின் மேலாளரான சேலத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர். திருடப்பட்ட செல்போன் டவரின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.