☰
×

"பொங்கலை மகிழ்ச்சியா கொண்டாடுங்க!" – இலவச வேட்டி, சேலை நெசவாளர்களுக்குக் கூலி உயர்வு..!

 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.

இப்பணியில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உடனடியாகத் துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள நெசவாளர்களை நேரில் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, நெசவாளர்களுக்குக் கூலி உயர்வு வழங்கி நேற்று முதலமைச்சர் விஜய் அரசாணை பிறப்பித்துள்ளார். இதில் கைத்தறி மற்றும் விசைத்தறி உள்ளிட்ட அனைத்து வகையான நெசவாளர்களுக்கும் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ”பொங்கல் 2027 வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு புதிய இரக பெடல்தறி மற்றும் விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளுக்கு கூலி உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக கூடுதலாக தேவைப்படும் செலவின தொகை ரூ. 13.66 கோடியினை 2026-2027 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக சம்மந்தப்பட்ட கணக்குத் தலைப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையில் இருந்து செலவினம் மேற்கொள்ள கைத்தறி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெடல்தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலை ஒன்றுக்கு ரூ. 125.72, வேட்டிக்கு ரூ. 49.99, விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலைக்கு ரூ. 54.81, வேட்டிக்கு ரூ. 23.34 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ”கூட்டுறவு சங்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நலங்கு வைத்து, வளையல் அணிவித்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து, காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.