"விநாயகர் சிலை வைக்க சிசிடிவி கட்டாயம்" - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பான பொதுமக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் தலைமையில் நடந்தது.
நிறுவப்படும் சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது, சிலை நிறுவும் இடத்தின் உரிமையாளரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற வேண்டும், மேலும் தீயணைப்புத் துறைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். நிறுவப்படும் சிலைகள் எளிதில் கரையக்கூடிய சுத்தமான களிமண்ணால் இருக்க வேண்டும், பிளாஸ்டிக் பாரிஸ் பயன்படுத்தி சிலைகள் அமைக்க கூடாது, சிலைகளுக்கு வண்ணம் பூசும்பொழுது நீர்நிலைகள் பாதிக்காதவாறு பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும், அதேபோல் சிலை அமைக்கும் இடத்தின் கூடாரம் எளிதில் தீப்பிடிக்கும் வகையில் இருக்கக் கூடாது, வருவதற்கு தனியாக வழியும் செல்வதற்கு தனியாக வழியும் போதுமான இட வசதியுடன் சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
இந்த கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.