×

காவலாளி அஜித் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

 

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பேராசிரியை நிதிதா நகை திருட்டுப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து அஜித்குமார் காவல் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும், அஜித்குமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அஜித்குமார் மரணம் தொடர்பாக மதுரை 4வது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் வாதிடுகையில், ‘அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், மாரீஸ்குமார், ஆயிரம் கே.செல்வகுமார், தீரன் திருமுருகன் ஆகியோர் வாதிடுகையில், ‘அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கு மட்டுமே சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேராசிரியை நிகிதா அளித்த புகாரின் பேரில் அஜித்குமார் மீது போலீஸார் நகை திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை. உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ காவல் மரணம் வழக்குடன் அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சிபிஐ காவலர்களையும் சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும். அஜித்குமாரின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு வாரத்தில் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்.

சிபிஐ விசாரணை அதிகாரி அஜித்குமார் வழக்கு தொடர்பான மாவட்ட நீதிபதி அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும், தடயங்களையும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். சிபிஐ விசாரணை அதிகாரி உடனடியாக விசாரணை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை தென் மண்டல ஐஜி, மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வழங்க வேண்டும். வழக்கின் அனைத்து சாட்சிகளுக்கும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.