சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று ஆஜர்..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக வருகிற 29-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகுமாறு த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, த.வெ.க. நிர்வாகிகள் 4 பேரும் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான த.வெ.க. தரப்பு விளக்கங்களை அளிக்க உள்ளனர். இதேபோல் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோருக்கும் சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களும் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்று தங்களது தரப்பு விளக்கங்களை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லிக்கு செல்ல இருப்பதால் கரூர் கூட்ட நெரிசல் வழக்கானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.