×

"ஜெய்பீம் படத்தில் என் வாழ்க்கையை அப்படியே காட்டியிருக்கிறார்கள்"

 

நவம்பர் 2ஆம் தேதியிலிருந்து தற்போது வரை ஜெய்பீம் படம் தான் ஹாட் டாபிக். அதில் நடித்த நாயகன் சூர்யாவை மையப்படுத்தியே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்திருக்கின்றன. படத்தில் வரும் எஸ்ஐ குருமூர்த்தியின் கேரக்டர் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அமைதியான எதிர்ப்பை தாண்டி கொலை மிரட்டல் வரை சென்றுவிட்டார்கள் வன்னியர் சங்கத்தினர். தலைமைப் பொறுப்பில் இருக்கும் அன்புமணியோ, சூர்யாவின் அடுத்த படங்களுக்கு இப்போதே மிரட்டலை தொடங்கிவிட்டார்.

இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டிலும் அவர் செல்லுமிடமெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது படம் குறித்து சிபிஐ மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பேசியிருக்கிறார். அவர், "மிகப் பரபரப்பாகப் பேசப்படும் ஜெய் பீம் படத்தை பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக பிரதிபலிக்கும் படமாக அது உள்ளது. ஒடுக்கப்பட்டோருக்கு, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 50, 60 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு எல்லாம் போராட்டம் நடத்தியதோ அந்தப் போராட்டத்துக்கு ஒரு கௌரவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கும், அந்தப் படத்திலே நடித்த சூர்யாவுக்கும், படத்தை அருமையாக இயக்கிய ஞானவேலுக்கும பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் பீம் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் படமா என்று கேட்டால் கட்டாயமாக இல்லை. அது ஒடுக்கப்பட்ட மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், இருளர் இன மக்கள், சந்தேக கேஸ் என்ற பெயரில் இன்று வரை பாதிக்கப்பட்டு வரும் மக்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. 'ஜெய் பீம்' படத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவைத் தருகிறது. இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் சூர்யாவோடு துணையாக நிற்போம்” என்றார்.