தாராபுரத்தில் திமுக நிர்வாகியிடம் ரொக்கம் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலனூரில் திமுக நிர்வாகியிடம் இருந்து ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் மூலனூர் காவல் நிலைய எல்லைக்குள், மூலனூரைச் சேர்ந்த செல்வராஜ் (57) என்பவரிடமிருந்து ரூ.7,63,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் திமுக மூலனூர் நகர் 6-வது வார்டு செயலாளர் எனக் கூறப்படுகிறது. முன்னதாக விஸ்வநாதன் என்பவரிடமிருந்து ₹40.79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் வைத்திருந்த ஃபைனான்ஸ் விஸ்வநாதன், திமுகவின் மூலனூர் பேரூர் கழக அவைத் தலைவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காக இருந்த பணம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.