ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப் பதிவு
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தியை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் டிஜிபி அலுவலக வாயிலில் ஏர்போர்ட் மூர்த்தி விசிகவினரை தாக்கியதாக திலீபன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது மெரினா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஏர்போர்ட் மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் விசிகவை சேர்ந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் தாக்குதல் நடத்திய விசிகவினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பதில் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.