கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு- சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 3 அதிகாரிகளிடம் விசாரணை
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 3 அதிகாரிகளிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலில் பெரிய குழப்பம் இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் பிற்பகலில் அவர் நேரடியாகப் புகார் அளித்திருப்பதாக கூறப்படுவது வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. அதாவது, 23.11.2026 திங்கட்கிழமை பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எம்.எல்.ஏ. தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும், தேவையற்ற மற்றும் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 3 அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது. தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, வருவாய் கோட்டாசியர் முருகன், வட்டாட்சியர் சேகர் ஆகியோரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான ஆவணங்கள் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஸ்டி சிங்கிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.