×

ஒரே ஆண்டில் ரூ.50 கோடி மோசடி- பகீர் கிளப்பும் ஆற்றல் அசோக்குமார் பின்னணி

 

அதிமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக்குமார் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ஆற்றல் அசோக்குமார். கடந்த 2006 ல் இருந்து நிர்வாக இயக்குநராக இருந்த ஆற்றல் அசோக்குமார், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியனைந்தார். பாஜக ஓ.பி.சி அணி மாநில தலைவராக இருந்த அவர், பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மொடக்குறிச்சி பாஜக எல்.எல்.ஏ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ.683 கோடி என தேர்தலின் போது கணக்கு காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநராக இருந்த அசோக்குமார், 2025-26 கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு, அப்பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு இமெயில் மூலம் தகவல் சென்றுள்ளது. மேலும் அதில் உள்ள லிங்கில் சென்று கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி வரவேற்பு அறையில் இருந்து சிலர் அழைத்து 2 நாட்களுக்குள் கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி சுமார் 3000 பெற்றோர், சுமார் ரூ.40 கோடியை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சந்தேகமடைந்த சிலர் நேரடியாக நிர்வாக குழுவிடம் கேட்ட போது இந்த மோசடி தெரியவந்துள்ளது. 

இதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அனைத்து பொருப்புகளில் இருந்தும் ஆற்றல் அசோக்குமார் நீக்கப்பட்டார். இதையடுத்து பள்ளியின் புதிய நிர்வாக குழுவினர் இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் ஆற்றல் அசோக்குமார், கில்பர்ட் ஜேம்ஸ் லூர்துராஜ், கார்த்திகேயன் துரைசாமி, சொக்கலிங்கம், விஜயகுமார், பிரபாகரன் ஆகியோர் மீது 350 - திருட்டு, 316 (2) நம்பிக்கை மோசடி, 319(2) ஏமாற்றுதல், 318(4) மோசடி, 61 - சதித்திட்டம், 66 , 66D  ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதே போல கடந்த பிப்.28 பள்ளி பேருந்துகள் வாங்க வேண்டும் என பள்ளி இயக்குநர்கள் குழு அனுமதியின்றி போலியான ஆவணங்களை காட்டி அசோக்குமார்  ரூ.9.69 கோடி கடன் பெற்றுள்ளார். மேலும் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களிலும் அசோக்குமார் மோசடியாக கடன் பெற்றுள்ளார்.  

பேருந்தின் அசல் விலை சுமார் ( தோராயமாக ) ரூ.26 லட்சமாக இருக்கும் நிலையில் அதனை (தோராயமாக) ரூ.32 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி லாபம் பெறும் நோக்கத்தில் செயல்பட்டது  கண்டறியப்பட்டது. மேலும் இதற்காக கடந்த பிப்.28 தேதி நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது போல போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநர் சிவசங்கரன் பட்டனம் சிங்காரம்  என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனராக இருந்த அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக் குமார் மீது 336(3), 340(2), 316 (2), ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரே ஆண்டில் ரூ.50 கோடி மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் பள்ளியில் இருந்த அனைத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை அசோக்குமார் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளனர். இதனிடையே கடந்த காலத்தில் அவர் என்னனென்ன மோசடி செய்துள்ளார் என ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மேலும் சில மோசடி தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.