×

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு

 

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த நில நாட்களுக்கு முன்னர் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நான்கு பேர் குழு ஒன்றை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அனுப்பி வைத்தார். இதனையடுத்து அந்த குழு தமிழகத்தில் வந்து விசாரணை நடத்திய நிலையில், அது போலியான வீடியோ என தெரியவந்தது. இதனிடையே வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது. இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வடமாநில தொழிலாளர் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் விடியோ பகிர்ந்திருந்தார். இந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் மீது வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது. இப்படி வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விடியோவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், சீமான் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  வட மாநிலத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.