×

அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

 

அதிமுக நிர்வாகியும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக் குமார் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில் கடந்த 2006ம் ஆண்டில்  நிர்வாக இயக்குநராக இருந்தவர் ஆற்றல் அசோக்குமார்.  அதிமுகவைச் சேர்ந்த இவர்  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியனைந்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் ஆற்றல் அசோக்குமார் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ  சி.ஆர்.சரஸ்வதியின் மருமகனும் ஆவார். தேர்தலின் போது அவரது  சொத்து மதிப்பு ரூ.683 கோடி என கணக்கு காட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையில் கடந்த மார்ச் - 24 தேதி ஆற்றல் அசோக்குமார், பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நிர்வாக இயக்குநர் பொருப்பில் இருந்து நீக்கப்பட்டார்.  அவரது அனைத்து அதிகாரங்களும் திரும்ப பெறப்பட்ட நிலையில்,  அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், மற்றும் சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 இந்நிலையில் புதிதாக வந்த நிர்வாகத்தினர் ஆய்வு செய்த போது ஆற்றல் அசோக்குமார் போலியான ஆவணங்களை காட்டி 45 பேருந்துகள் வாங்க, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் பெற்றது தெரியவந்தது. மேலும் பேருந்தின் அசல் விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கியதும்,  லாபம் பெறும் நோக்கத்தில் செயல்பட்டது  கண்டறியப்பட்டது. அத்துடன் இதற்காக கடந்த பிப்.28 தேதி நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் நடத்தில் அதில் தீர்மானம் போடப்பட்டது போலவும் போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநர் சிவசங்கரன் பட்டனம் சிங்காரம்  என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனராக இருந்த அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக் குமார் மீது 336(3), 340(2), 316 (2), ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.