×

"சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் பரிசு" - பாமக மா.செ. மீது வழக்குப்பதிவு; போலீஸ் அதிரடி!

 

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இருளர் இன மக்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக பெரும்பான்மையானோர் நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரேயொரு காட்சியை மட்டும் பிடித்துக்கொண்டு வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

"தியேட்டரில் ஓடும் ஜெய்பீம் படத்தை கொளுத்துவோம்" என்றார்கள். தியேட்டரில் ஓடவில்லை என சொன்னதும் அமேசான் பிரைமை அன்-இன்ஸ்டால் செய்து எதிர்ப்பை காட்டினர். உச்சக்கட்டமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை முன்வைத்து கடிதம் எழுதினார். அதில், அடுத்த படம் தியேட்டரில் வெளியானால் அசாம்பாவிதங்கள் நடக்கும் என மறைமுக எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதனிடையே வன்னியர் சங்கம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

அதேபோல மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுப்படுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு  லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது” என்றார். இது பெரும் சர்ச்சையாகி போனது.

அவரின் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்கள் அனைவரும் சூர்யாவுடன் துணை நிற்போம் என #WeStandWithSuriya ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர். தற்போது சூர்யாவுக்கு திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சூர்யாவுக்கு மிரட்டல் வந்திருப்பதால் அவரது வீட்டிலும் செல்லுமிடம் எல்லாம் அவருக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக பழனிச்சாமி மீது 5  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.