×

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்கு- கோவை மாவட்ட ஆட்சியர்

 

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்.23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலானது. இதில் கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 90 பறக்கும் படைகள், 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 10 விடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தொகுதிக்கு தலா 9 குழுக்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். இக்குழுவினர் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் அல்லது பரிசு பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? என கண்காணிக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒவ்வொரு குழுவிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை உக்கடம் நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையின் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு காரில் கட்சி கொடியுடன் வந்த வாகனங்கள் நிறுத்தி அதனை அகற்ற உத்தரவிட்டனர். அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகி ஒருவரது காரை அதிகாரிகள் நிறுத்தி கொடியை அகற்ற அறிவுறுத்திய போது அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அதிமுக கொடியை அகற்றினார். அதே போல கேரளா அரசு பேருந்து, ஆம்னி பேருந்துகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்துள்ளார்.