நெல்லை கார் தீ விபத்து: பிரேதப் பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்த பெட்டைக்குளத்தில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையின் ஓரம், கார் ஒன்றில் எரிந்த நிலையில் 4 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள், சென்னையை சேர்ந்த முகமது ரபீக், அவரது மனைவி சையது நஸ்ரின் பாத்திமா மற்றும் 15 வயது மகள், 12 வயது மகன் எனத் தெரியவந்தது.
காவல்துறை சார்பில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள், கைவிரல் ரேகை நிபுணர்கள், மோப்பநாய் அனுப்பப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வந்த முகமது ரபீக் அங்கிருந்த தனது சொந்த வீட்டை சமீபத்தில் விற்றுள்ளார். அவரது மனைவி சையது நஸ்ரின் பாத்திமா, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.
முகமது ரபீக் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக கடன்காரர்கள் அடிக்கடி முகமது ரபீக் வீட்டிற்கு வந்து சென்றதாகவும், இதனால் அவர் அதிக மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால் 4 நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனது மனைவியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் குடியேற குடும்பத்தோடு அவர்கள் வந்திருக்கலாம் எனவும் போலீசாரின முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, எரிந்த நிலையில் கண்டறியப்பட்ட அவர்களின் கார், நேற்று முன்தினம் நள்ளிரவு (மார்ச் 16) ஆத்தங்கரை பேருந்து நிலையம் மற்றும் சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்ற சிசிடிவி காட்சியும் வெளியானது.
தற்போது ரம்ஜான் நோன்பு காலம் நடைபெற்று வரும் சூழலில் இறப்பதற்கு முன்பு, நான்கு பேரும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களிடம் இருந்த பழைய துணிகள் உள்ளிட்ட உடைமைகளை தானமாக வழங்கிவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர்.
எனவே, விரக்தியில் இருந்த முகமது ரபீக், குடும்பத்தோடு காரை தீவைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். குறிப்பாக முகமது ரபீக் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது அதில், 'காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம், தற்கொலையாகவோ அல்லது விபத்தாகவோ இருக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவந்த நிலையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில், முகமது ரபீக், அவரது மகன் உடல்கள் முழுமையாக எரிந்துவிட்டதால் அதில் இருந்து எந்த ஒரு தடயமும் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால், முகமது ரபீக்கின் மனைவி மற்றும் மகளின் எரிந்த சடலங்களை உடற்கூறு ஆய்வு செய்தபோது, அவர்கள் விஷம் உட்கொண்டதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. உடற்கூறு ஆய்வுக்கு பின்பு, 4 பேரின் உடல்களும், முகமது ரபீக்கின் மாமனார் வசம் ஒப்படைக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது ரபீக் குடும்பத்தோடு தற்கொலை செய்த்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக ரபீக்கின் மனைவி மற்றும் மகள் விஷம் அருந்தியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே 4 பேரும் விஷமருந்தி விட்டு, பின்னர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டனரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.