எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து- 4 பேர் பலி
எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது இன்னோவா கார் மோதிய விபத்தில் சென்னை குளத்தூர் பகுதியை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன்- வனிதா உள்ளிட்ட 6 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று பகலில் அங்கிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்துள்ள எம். கோட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக கார் மோதியது. இந்தக் கோர விபத்தில் இன்னோவா காரில் பயணித்த சென்னை குளத்தூரை சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி, வசந்தி ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்த சிறுவர் சிறுமி இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிறுவர் சிறுமிகளை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.