‘கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் கேப்டன் விஜய்காந்த்” - அண்ணாமலை..
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
தேமுதிக நிறுவனரும், புரட்சிக் கலைஞருமான கேப்டம் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அவரது நினைவுகளை போற்றி புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, “தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று.
திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.