×

சொந்த ஊர் போக டிக்கெட் கிடைக்கலையா..? கவலை வேண்டாம்..! தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..! 

 

 தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் ஓரிரு நாள்களில் பயணம் மேற்கொள்வதால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளை அறிவித்து இயக்கி வருகிறது.ரயில்கள் பொறுத்தவரை முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் மதுரை இடையே, அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்குச் செல்லும். 12 மெமு பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், சென்னை எழும்பூரில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு மதுரையை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், மதுரை மற்றும் தாம்பரம் இடையே, அக்டோபர் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில்கள், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்குச் செல்லும். 12 மெமு பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், மதுரையில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு சென்னை சென்றடையும்.

மேலும், அக்டோபர் 17 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும், அக்டோபர் 20 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கும் முன்பதிவு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு விரைவு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி வழியாகச் செல்லும். இந்த ஏற்பாடுகள், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடச் செல்லும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.