×

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

 

மஹாராஷ்டிராவை சேர்ந்த வர்ஷா, 62, என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும், 1974-ல் திருமணம் நடந்தது. இருவரும், 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 1980-ல் விவாகரத்து வழங்கப்பட்ட போது, வர்ஷாவுக்கு மாதம், 6,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி நரேனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையே, 2012- மார்ச்சில் நரேன் காலமானார்.

இதையடுத்து, குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வர்ஷா, கணவர் மறைவுக்கு பின் நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை வசூலித்து தரவும், விலைவாசி உயர்வு மற்றும் மருத்துவ செலவுகளை கருதி, ஜீவனாம்ச தொகையை உயர்த்தி தரவும் கோரினார்.இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், நிலுவைத்தொகையை வசூலிக்க, 2023 பிப்ரவரியில் அனுமதி அளித்தது. ஆனால், ஜீவனாம்ச தொகையை உயர்த்த மறுத்து விட்டது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வர்ஷா மேல்முறையீடு செய்தார்.

இதை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டங்க்ரே, மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு: கணவர் இறந்த பின், அவர் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை பெற மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த தொகையை உயர்த்தி வழங்கக் கோர உரிமை இல்லை. ஜீவனாம்ச தொகையை உயர்த்த அனுமதிப்பது தேவையற்ற சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.கணவரின் இறப்பிற்கு பின், அவரது வாரிசுகளின் முயற்சியால் சொத்து அதிகரித்திருந்தால், அதில் முன்னாள் மனைவி உரிமை கோர முடியாது.

வாரிசுகளின் சொந்த உழைப்பால் உருவான சொத்து வளர்ச்சியில், முன்னாள் மனைவியை இணைப்பது அவர்களுக்கு செய்யும் அநீதியாகும்.கணவர் உயிருடன் இருந்த காலத்தில் சொத்து சேர்த்திருந்தால், அதில் மனைவி பங்கு கேட்க முடியும். ஆனால், வாரிசுகளின் நிதி வளர்ச்சியை முன்னாள் மனைவியுடன் பகிர வாரிசுகள் கடமைப்பட்டவர்கள் அல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.