☰
×

புதிதாக வாங்கிய ஆடைகளை துவைக்காமல் அணியலாமா? மருத்துவர்களும் நிபுணர்களும் சொல்வது என்ன?

 

புதிதாக வாங்கிய ஆடைகளைத் துவைக்காமல் அணிவது சரும ஆரோக்கியத்திற்கு உகந்ததா, முதல் துவையலில் நிறம் மங்காமல் எப்படிப் பராமரிப்பது என்பது குறித்துப் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. உற்பத்தி, பேக்கிங், போக்குவரத்து மற்றும் கடையில் காட்சிக்கு வைப்பது எனப் பல நிலைகளைக் கடந்து வரும் ஆடைகளில் தூசி, அழுக்கு மற்றும் தொழிற்சாலை ரசாயனங்களின் மிச்சங்கள் படிந்திருக்க வாய்ப்புள்ளது.

எனவே, முடிந்தவரை புதிதாக வாங்கிய ஆடைகளை முதல் முறை துவைத்த பிறகே அணிவது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, சாயம் முழுமையாகப் படியாத நிலை, சரும ஒவ்வாமை, அரிப்பு அல்லது சிவத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் கட்டாயம் துவைத்த பிறகே ஆடைகளை அணிய வேண்டும் எனச் சரும மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சாயம் போகாமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • தனித்தனியாகத் துவைக்கவும்: முதல் முறை துவைக்கும்போது மற்ற ஆடைகளுடன் சேர்க்காமல், குறிப்பாக அடர் நிற ஆடைகளைத் தனித்தனியாகத் துவைக்க வேண்டும்.

  • சாதாரண அல்லது குளிர்ந்த நீர்: சூடான நீரைத் தவிர்த்து, குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் துவைப்பது நிறம் மங்குவதைக் குறைக்கும்.

  • மைல்டு டிடர்ஜென்ட்: வீரியம் குறைந்த திரவ டிடர்ஜென்ட் பயன்படுத்தலாம்; இல்லையெனில் வெறும் நீரில் அலசியும் பயன்படுத்தலாம்.

  • உள்ளே திருப்பித் துவைத்தல்: ஆடையைத் தலைகீழாகத் திருப்பித் துவைப்பதால் வெளிப்புற நிறம், பிரிண்ட் மற்றும் வேலைப்பாடுகள் பாதுகாக்கப்படும்.

  • குறுகிய நேரம் & மென்மையான கையாளுதல்: நீண்ட நேரம் ஊறவைப்பதைத் தவிர்த்து (சுமார் 5 நிமிடங்கள் வரை மட்டும்), அதிகமாக முறுக்கிப் பிழியாமல் மெதுவாகக் கையாள வேண்டும்.

  • நிழலில் உலர்த்துதல்: நேரடி வெயிலில் நீண்ட நேரம் காயவைப்பதைத் தவிர்த்து, நிழலில் காற்றோட்டமாக உலர்த்துவது நிறத்தைப் பாதுகாக்கும்.

உப்பு, வினிகர் மற்றும் துணி வகைகள்: துணியில் சாயம் நிற்க உப்பு அல்லது வினிகர் சேர்ப்பது எல்லா வகையான சாயங்களுக்கும் பலன் தரும் என்பதற்கு உறுதியான அறிவியல் அடிப்படை இல்லை; ஆடையில் உள்ள பராமரிப்பு லேபிள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே சிறந்தது. சாயம் போகிறதா என்பதை அறிய, ஆடையின் மறைவான பகுதியில் சிறிது தண்ணீர் தெளித்து வெள்ளைத் துணியால் ஒற்றிப் பார்க்கலாம்; நிறம் ஒட்டினால் தனித்தனியாகத் துவைக்க வேண்டும்.

காட்டன் மற்றும் அடர் நிற ஆடைகளைத் தனியாகவும், பிரிண்டட் ஆடைகளை உள்ளே திருப்பியும், சில்க் ஆடைகளை லேபிள் மற்றும் தேவைக்கேற்ப ட்ரை கிளீனிங் முறையிலும், குழந்தைகளின் ஆடைகளை மென்மையான டிடர்ஜென்ட் கொண்டும் துவைத்துப் பராமரிப்பது சருமப் பாதுகாப்புடன் ஆடையின் பொலிவையும் நீடித்து நிலைக்கச் செய்யும்.