×

பூத் ஸ்லிப் மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியுமா?  முழு விவரம்!

 

பூத் ஸ்லிப்பில், வாக்காளரின் பெயர், பாலின, வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் எண் (EPIC Number) உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் பெயர், எண், முகவரி மற்றும் வாக்காளர் பட்டியலில் அந்த வாக்காளரின் பெயர் இடம் பெற்றுள்ள வரிசை ஆகிய முக்கிய தகவல்கள் அடங்கியிருக்கும். 

இதில் இருக்கும் வரிசை எண்ணை, வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பிப்பதால் நம் விவரங்களை அவர்கள் வெகு விரைவில் சரிபார்த்து, வாக்குப்பதிவு அறைக்குள் அனுப்புவர். உதாரணத்திற்கு, வாக்குச்சாவடி மையத்தில் பல அறைகள் இருக்கும் பட்சத்தில், நாம் எந்த அறைக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை இந்த பூத் ஸ்லிப் மூலமாக துல்லியமாக தெரிந்துக்கொள்ள முடியும்.

இது அடையாளச்சான்று கிடையாது!

பூத் ஸ்லிப்பை, பலரும் அடையாள சான்று என்று நினைத்துக்கொள்கின்றனர். அதனை எடுத்துக்கொண்டு வாக்களிப்பதற்காக சென்று விடுகின்றனர். ஆனால், வாக்களிக்க செல்லும் போது முக்கியமாக நாம் எடுத்துச்செல்ல வேண்டியது வாக்காளர் அடையாள அட்டை எனப்படும் (Voter ID) ஆகும். அப்படியில்லை என்றால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்துச்செல்லலாம்.

பூத் ஸ்லிப் பெறுவது எப்படி?

பூத் ஸ்லிப் என்பது, தேர்தலுக்கு முன்னதாகவே அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். கட்சி சார்பாகவோ, அந்த பகுதியில் இருக்கும் பிரமுகர் சார்பாகவோ சிலர் இந்த பூத் ஸ்லிப்பை வழங்குவர். அப்படி இல்லை என்றால், வாக்குச்சாவடியில் இருக்கும் கட்சி முகவர்களிடமும் இதனை கேட்டு பெறலாம். 

ஆன்லைனில் பூத் ஸ்லிப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இப்போது ஆன்லைனிலும் பூத் ஸ்லிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு முதலில், https://electoralsearch.eci.gov.in/ தளத்திற்குள் செல்ல வேண்டும். 

இதில், உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் வைத்து பூத் ஸ்லிப்பை பதிவிறக்கம் செய்வது, உங்களது பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கொடுத்து பூத் ஸ்லிப்பை பதிவிறக்கம் செய்வது, மொபைல் நம்பர் கொடுத்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதலில் EPIC எண்ணை வைத்து எப்ப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்று பார்ப்போம். இதில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை செலுத்தி, தமிழ்நாடு என்பதை "Select your state”ல் க்ளிக் செய்ய வேண்டும். கடைசியில், கீழிருக்கும் Captcha-வை உள்ளிட்டு Search-ஐ க்ளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால், உங்கள் பூத் ஸ்லிப் இருக்கும் பேஜ் வந்து விடும்.

இரண்டாவதாக, உங்கள் விவரங்களை உள்ளிட்டும் பூத் ஸ்லிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனிப்பட்ட விவரங்களில் உங்கள் பெயரையும், உங்கள் உறவினர் பெயரையும் (SIR படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது) பதிவிட வேண்டும். உங்களது மாநிலமான தமிழ்நாடு, மொழி, உங்கள் பிறந்த தேதி, வயது, பாலினம் உள்ளிட்டவற்றை நிரப்பி உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதியை உள்ளிட வேண்டும். இப்படி செய்த பின்பு, CAPTCHA-வை உள்ளிட்டு Search கொடுத்தால் பூத் ஸ்லிப் வந்து விடும்.

மூன்றாவது வழிமுறை ரொம்பவே சிம்பிள். உங்கள் மாநிலமான தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு, வாக்காளர் அடையாள அட்டை வாங்கும் போது எந்த மொபைல் எண்ணை அதற்கு கொடுத்தீர்களோ அதை பதிவிட்டு, அதற்கு வரும் OTP-ஐ உள்ளிட வேண்டும். கடைசியில் CAPTCHA-வை உள்ளிட்டு உங்கள் பூத் ஸ்லிப்பை பதிவிறக்கும் செய்து விடலாம்.