கடந்த 4 ஆண்டுகளில் செய்யாதததை நான்கு மாதத்தில் செய்துவிட முடியுமா? திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் திமுக அரசின் மீதான பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ என்று கிண்டல் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி “தமிழ்நாடு முழுவதும் உங்கள் ஆட்சியில் இயங்கி வருகிற பேருந்துகள்தான் சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்து போல மோசமான நிலையில் உள்ளது” என கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுவதும் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதே உள்ளது. அதற்கு காரணம் அவரை காண மக்கள் அலையென குவிவதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யாதததை நான்கு மாதத்தில் செய்துவிட முடியுமா? ஒரு துண்டி சீட்டில் 46 சேவைகள் என அச்சடித்து யாரை ஏமாற்றுவதற்கு புறப்பட்டிருக்கிறீர்கள்? முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம், ஆனால் வயிற்றெரிச்சலில் வசைபாடக் கூடாது.
இன்றைக்கு உங்கள் ஆட்சிதான் ஐசியுவில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதற்கெல்லாம் நீ சரிப்பட மாட்டாய் என வசை பாடியுள்ள நீங்கள்தான் எதற்குமே சரிப்பட மாட்டீர்கள்.
எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தை சுந்தரா ட்ராவல்ஸ் என்று கேலி பேசியிருக்கிறீர்கள். இது சுந்தரா ட்ராவல் அல்ல, மக்களின் நம்பிக்கை ட்ராவல்ஸ். உங்கள் ஆட்சிக்கு முடிவுக் கட்டப்போகிற ட்ராவல்ஸ். அதை குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.