×

வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு செல்லலாமா?

 

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் செல்ஃபி, ரீல்ஸ் மோகம் அதிகமாக உள்ளது. ஆனால், வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தடை விதித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவு வரை மட்டுமே நீங்கள் போனை பயன்படுத்த முடியும். ஒருவேளை நீங்கள் செல்போனுடன் வாக்குச்சாவடிக்கு சென்றால், அதனை பாதுகாப்பாக ஒப்படைக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியிலும் பிரத்யேகமான செல்போன் பாதுகாப்பகம் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உங்கள் போனை ஒப்படைத்துவிட்டு, டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். ஓட்டு போட்டு முடித்த பின் டோக்கனை தந்து போனை திரும்பப் பெற்று கொள்ளலாம். செல்போனை போலவே ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் இயர்போன், கேமரா மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் கவலை வேண்டாம். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் ஆவணத்தை காட்டி நீங்கள் ஓட்டு போடலாம்.

வாக்குச்சாவடிக்கு செல்லும் நேரம்

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்கூட்டியே சென்று வாக்களிப்பது சிறந்தது. வரிசையில் நிற்கும் போது முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் மூன்று அதிகாரிகளை நீங்கள் கடந்து செல்ல வேண்டும். முதல் அதிகாரி உங்கள் அடையாள அட்டையை சரிபார்ப்பார். இரண்டாவது அதிகாரி உங்கள் விரலில் அழியாத மை வைப்பதுடன், பதிவேட்டில் உங்கள் கையொப்பத்தை பெறுவார். மூன்றாவது அதிகாரி உங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கி, வாக்குப்பதிவு இயந்திரத்தை செயல்படுத்துவார். வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மறைவான பகுதிக்கு சென்று, நீங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக உள்ள நீல நிறப் பட்டனை அழுத்த வேண்டும். பட்டனை அழுத்தியதும் பீப் என்ற நீண்ட சத்தம் கேட்கும்; இது உங்கள் வாக்கு வெற்றிகரமாக பதிவாகிவிட்டதை உறுதி செய்யும். 

நீங்கள் ஓட்டு போட்டவுடன், இயந்திரத்தின் அருகில் உள்ள VVPAT கருவியில் உள்ள கண்ணாடி திரை வழியாக ஒரு சிறிய சீட்டு தோன்றும். அதில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயரும், சின்னமும் சரியாக பதிவாகியுள்ளதா என்பதை 7 வினாடிகள் வரை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடிக்கு செல்லும் போது, எந்த ஒரு அரசியல் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட அல்லது அந்த கட்சியை பிரதிபலிக்கும் வகையிலான துண்டுகள், தொப்பிகள், டி-சர்ட்டுகள் போன்றவற்றை அணிந்து செல்வது தேர்தல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும்.

வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவிற்குள் எந்தவித அரசியல் பிரசாரமோ, வாக்கு சேகரிப்போ செய்யக்கூடாது. அமைதியான முறையில் வரிசையில் நின்று உங்கள் வாக்கை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது.