ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா..? அமைச்சர் வன்னி அரசின் பதிலுக்கு நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இக்கொடூர வழக்கு குறித்து ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளிப்பதற்காக, மேற்கு மண்டல காவல்துறை ஐஜி (IG) ரம்யா பாரதி ஐபிஎஸ் மற்றும் உயர் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்புக்குத் தயாராகினர். அப்போது, கேமராக்கள் ஆன் செய்யப்படுவதற்குச் சில நொடிகள் முன்பு, ஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட பெண் காவல்துறை அதிகாரிகள் சில விஷயங்களைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரமான மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்துப் பேசுவதற்காக வந்த இடத்தில், அதுவும் பொறுப்பான பதவியில் இருக்கும் பெண் உயர் அதிகாரிகள் இப்படி அலட்சியமாகச் சிரித்துப் பேசியது சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
'ஒரு காவல் அதிகாரி இதுபோன்ற உணர்ச்சிமிக்க சம்பவத்தை விவரிக்க வந்த இடத்தில் சிரிப்பதா? அங்கு எப்படி சிரிப்பு வரும்? என கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. காவல் அதிகாரியைத் தாண்டி, இதுதொடர்பாக பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிரித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்துள்ள அவர்,
"காவல்துறை அதிகாரிகள் சிரிக்கவே கூடாதா?
எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? கோவை சிறுமி வழக்கு குறித்து பேட்டி கொடுப்பதற்கு முன், தங்களுக்குள் வேறு விஷயங்களை பேசி சிரித்திருக்கிறார்கள். இது அதீதமான குற்றச்சாட்டு. காவல்துறை சிரிக்கக்கூடாதா? அவர்கள் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் சிரிக்கலாமா, சிரிக்கக்கூடாதா என எப்படி நீங்கள் பேசுவது? ஊடகங்கள் அதை பெரிதுப்படுத்தி விட்டார்கள்” என பதிலளித்துள்ளார்.
வன்னி அரசின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அவர்கள் சிரித்ததை யாரும் தவறு சொல்லவில்லை, எந்த சூழல் என்பதுதான் பிரச்சனை. வன்னி அரசு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் இதுபோன்று பேசக்கூடாது. அவர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.