இன்றுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அனல்பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது.
அக்டோபர் 6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவை தடுக்க மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை. மதுராந்தகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், பணப் பட்டுவாடா மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இத்தொகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக 9 பறக்கும் படை குழுக்களுடன், நிலை கண்காணிப்பு மற்றும் காணொளி கண்காணிப்புக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் தலைவர்களின் பரப்புரை வேகம் எடுத்துள்ளதால், பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அனல்பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. அரசியல் கட்சியினர் வீதிவீதியாக சென்று வாக்காளர்களிடம் இறுதிக்கட்ட வாக்கு சேகரிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்காளர் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகளில் வெளியாட்கள் இருக்கிறார்களா என சோதனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.