25 வருஷ கோரிக்கையை நிறைவேற்றிய கீர்த்தனா! கோணபட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி- மக்கள் மகிழ்ச்சி
சிவகாசி-கோணம்பட்டி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிவகாசி – கோணம்பட்டி பேருந்து சேவையை அமைச்சர் கீர்த்தனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களோடு அரசுப் பேருந்தில் பயணித்தார்.
சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள கோணம்பட்டியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக கோணம்பட்டி விலக்குப் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது நீண்ட நேரமாகியும் பேருந்து வராததாலும், கோணம்பட்டி விலக்கில் நிற்காமல் சென்றதாலும் ஆத்திரமடைந்து எங்களுக்கு இலவச பேருந்து சேவை கூடத் தேவையில்லை. ஆனால் முறையாக பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மற்றும் தங்கள் கிராமமான கோணம்பட்டி ஊருக்குள் பேருந்து வராததால் சுமார் 2- கிலோமீட்டர் தூரம் அனைத்து தரப்பினர்களும் நடந்து சென்று பேருந்து ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை தொடர்வதாகவும் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார்.
25 வருஷமா கோணபட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு வைத்த கோரிக்கை நிறைவேற்றி தந்த அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு நன்றி
— DR PK 🖤♥️ (@trackerdmk) May 29, 2026
pic.twitter.com/npIhJQvqpN
இதனைக் கவனத்தில் மேற்கொண்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தவெக நிர்வாகிகளை உடனடியாக கோணம்பட்டி கிராமத்திற்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அக்கிராம மக்கள் பேருந்து வசதி செய்துதர வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை முன் வைத்து வருவதையறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து வசதி வழங்க பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து சிவகாசி - கோணம்பட்டிக் கிடையேயான அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் கீர்த்தனா, அதே பேருந்தில் கிராம மக்களுடன் பயணித்தபடி சென்று குறைகளையும் கேட்டறிந்தார். பல வருடங்களாக முன்வைத்த தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனாவிற்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள் முதல் முறையாக தங்கள் கோணம்பட்டி கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்துக்கு மலர் தூவியும், சூரைத்தேங்காய் உடைத்தும் வரவேற்பளித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.