'என்னை அப்பாவுடனேயே அடக்கம் செய்யுங்கள்..' உள்ளங்கையில் உருக்கமான வேண்டுகோள்..!
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் கடந்த 17ம் தேதி காலை வழக்கம்போல் வயலுக்கு சென்றிருக்கின்றார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மூன்றடைப்பு காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.மூனறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, தந்தையை இழந்த துக்கம் தாளாமல் அவரது மகள் பேபி கனி (வயது 23) தற்கொலைச் செய்துக் கொண்டிருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வீட்டின் அறையில் பேபி கனி தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்தது. அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
தற்கொலைச் செய்துக் கொண்ட இளம்பெண் நர்சிங் படித்து முடித்துவிட்டு தொகுப்பூதிய அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே தந்தை உயிரிழந்து சில தினங்களே ஆகி உள்ள நிலையில் மகளும் உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அவர் எழுதி வைத்திருந்த கடிதம் மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அந்த கடிதத்தில் அவர், "தந்தையோடு இருந்த நாட்களை மறக்க முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன். இரண்டு நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள்தான் தந்தை கொலைக்கு காரணமானவர்கள். அவர்களை காவல்துறை விரைவில் கைது செய்ய வேண்டும்" என எழுதியுள்ளார். மேலும் அவரது உள்ளங்கையில், 'நான் தாளில் எழுதி இருப்பதை நிறைவேற்றி என்னையும் எங்க அப்பாவுடன் அடக்கம் செய்யுங்கள்' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் கூறுகையில், "இறந்த பெண் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. அப்பாவின் இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் தான் அப்பெண் தற்கொலை செய்து கொண்டார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் தற்கொலை வழக்குப் பதிவு செய்திருக்கின்றோம். இருவரது உடலும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது" என்றார்.