×

அடுத்தாண்டு புல்லட் ரயில் சேவை தொடங்கும்: மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்..!

 

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, அதாவது இந்தியாவின் 81-வது சுதந்திர தினத்தன்று முறைப்படி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து வாபி, அகமதாபாத் மற்றும் மும்பை எனப் படிப்படியாக முக்கிய நகரங்களுக்கு இந்த அதிவேக ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மும்பை முதல் அகமதாபாத் வரையிலான 508 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் இந்த அதிவேக ரயில் பாதையில் மேம்பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் நவீன ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்து ரயில் சேவை தொடங்கும்போது, புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். இதன் மூலம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

புல்லட் ரயில் மட்டுமின்றி, பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' (Vande Bharat Sleeper) ரயில்கள் குறித்த அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த மாதத்தின் மத்தியில், அதாவது ஜனவரி 15-ம் தேதியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். ரயில்வே துறையின் இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் இந்தியப் பயணிகளின் போக்குவரத்து அனுபவத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.