×

வேலூரில் சீறிப்பாய்ந்த காளை.. தூக்கி வீசப்பட்ட இன்ஸ்பெக்டர்! காளை முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கோவிந்த ரெட்டி பாளையத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு  எருது விடும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பாய்ச்சல் காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகள் ஒவ்வொன்றாக வீதிகளில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவற்றை ஆர்வத்துடன் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

விழாவின் பாதுகாப்புப் பணியில் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கர் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை, இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கரை முட்டித் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாதையோரம் நின்றிருந்த பார்வையாளர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார்.

இருப்பினும், காளைகள் அடுத்தடுத்து அதிவேகமாக ஓடி வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது காளைகள் முட்டியதில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த திடீர் விபத்துகளால் விழாக் களத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த அசம்பாவிதங்களுக்கு இடையே ஒரு சோகமான நிகழ்வாக, திருவண்ணாமலையைச் சேர்ந்த திலகர் (65) என்ற முதியவர் உயிரிழந்தார். தனது மகள் வீட்டிற்குப் பொங்கல் பண்டிகைக்காக வந்திருந்த அவர், காளைகள் ஓடும் பாதையோரம் நின்று விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காளை அவரை முட்டித் தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், காளைகள் எதிர்பாராத விதமாகப் பார்வையாளர்கள் பகுதிக்குள் நுழைந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள போலீசார், முதியவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.