ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’... களம் காணும் அண்ணன் - தம்பி
தேனி மாவட்டத்தின் வி.ஐ.பி தொகுதியான ஆண்டிபட்டியில், இந்தத் தேர்தலிலும் 'அண்ணன் - தம்பி' இடையிலான நேரடி மோதல் உறுதியாகியுள்ளது.
கடந்த இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என அடுத்தடுத்த இரண்டு களங்களிலும் ஆண்டிபட்டி தொகுதி ஒரு சுவாரஸ்யமான போரைக் கண்டது. திமுக சார்பில் மகாராஜன் களம் இறங்க, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டார். ரத்தச் சொந்தங்கள் இருவேறு துருவங்களாக மோதிக்கொண்ட இந்த 'சகோதர யுத்தத்தில்', கடந்த இரண்டு முறையும் அண்ணன் மகாராஜனே (திமுக) வெற்றி வாகை சூடி, தொகுதியைத் தன் வசப்படுத்தினார். இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக மீண்டும் லோகிராஜன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தோல்விகளுக்குப் பதிலடி கொடுத்து, இந்த முறை தொகுதியை மீட்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். மறுபுறம், திமுக தரப்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மீண்டும் களம் காண்கிறார்.
தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தொகுதியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கடந்த இரண்டு வெற்றிகள் தந்த பலம் ஆகியவை அண்ணன் மகாராஜனுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைத் தேடித்தரும் என திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மூன்றாவது முறையாக 'அண்ணன் - தம்பி' மோதலை ஆண்டிபட்டி தொகுதி சந்திக்க உள்ளது. "மீண்டும் அண்ணன் கோட்டையைத் தக்க வைப்பாரா? அல்லது தம்பி வியூகம் பலிக்குமா?" என்பதே தேனி மாவட்ட அரசியலின் இப்போதைய ஹாட் டாபிக். தற்போதைய நிலவரப்படி அண்ணன் மகாராஜனின் கை ஓங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொண்டாலும், தேர்தல் களம் செல்லச் செல்ல போட்டி மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக நேருக்கு நேர் மோதும் உடன் பிறந்த சகோதரர்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற திமுகவும், இழந்த கோட்டையை மீட்டெடுக்க அதிமுகவும் தீவிரமாக உள்ளன. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் இருவரும் எதிரதிர் அணியில் நேருக்கு நேர் மோத உள்ளனர். திமுக சார்பில் நடப்பு எம்எல்ஏ மகாராஜனும், அதிமுக சார்பில் அவருடைய உடன் பிறந்த தம்பி லோகிராஜனும் இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு அதிமுக கோட்டையாக கருதப்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும் அதிமுக சார்பில் லோகிராஜனும் முதல் முறையாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 12 ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சகோதரர்கள் இருவரும் மீண்டும் எதிரெதிரே போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன் 8 ஆயிரத்து 538 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் அ.தி.மு.கவின் வெற்றியை பறிக்கும் சக்தியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 3வது முறையாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உடன் பிறந்த சகோதரர்களான மகாராஜன் மற்றும் லோகிராஜன் ஆகியோர் எதிரெதிரே களம் காண தயாராகியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்புடன் நடப்பு திமுக எம்எல்ஏ மகாராஜனும், கடந்த இரண்டு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துள்ளதால் தனக்கே வெற்றி என முனைப்புடன் லோகிராஜனும் தேர்தலை சந்திக்க உள்ளனர். தொடர்ந்து மூன்று முறை உடன் பிறந்த சகோதரர்கள் எதிரெதிர் அணியில் தொடர்ந்து போட்டியிடும் சம்பவம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் பேசு பொருளாகியுள்ளது.